மதுரையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவல் ஆணையர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரது உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த வாரம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும், விசாரணை அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும், விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரி தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
“கொலையா? ஆணவப் படுகொலையா?” என்ற கேள்வியை எழுப்பி 7 நாட்களாக பிணவறையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் உடல் வைக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினரின் மெத்தனப் போக்கை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.
மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து விரட்டியதால், அவர்கள் காவல் ஆணையர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட பலரை காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்தப் போராட்டம் காரணமாக மதுரை அழகர் கோவில் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு நிலவியது. காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்காரர்கள் பின் வாங்கவில்லை. இந்நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், கொலை வழக்காக பதிவு செய்யப்பட வேண்டும், உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மாற்றப்பட வேண்டும் என கோரிக்கைகளை போராட்டத்தை ஈடுபட்டு வருபவர்கள் முன் வைத்தனர்.
