திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பல்லாளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த் (28) என்பவர் தர்மபுரியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வித்யா கடந்த வெள்ளிக்கிழமை தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டு மற்றும் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ஏழரை சவரன் தங்க நகை, 200 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.மேலும்
வீட்டில் இருந்த உண்டியல் பணம், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விஜயகாந்தின் மனைவி வித்யாவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகை,பணம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகை மாதிரிகளை சேகரித்து கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
