ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வழிபாடு செய்ய வந்த தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து திருச்சி மாநகர் கருமண்டபம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் வந்தார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் சிவராம் குமார், திருக்கோவிலில் மூத்த அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்ளிட்ட அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க தங்கக் குடத்தில் பூரண கும்ப மரியாதை வழங்கி சால்வை அணிவித்தும் பூங்கொத்தும் கொடுத்து வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோவில் ஆண்டாள் யானைக்கு பழங்களைக் கொடுத்தார். கோவில் யானை ஆண்டாள் ஆசிர்வாதம் செய்தது. தொடர்ந்து பேட்டரி கார் மூலம் சென்ற அவர் சக்கரத்தாழ்வார் சன்னதி, ராமானுஜர் சன்னதியில் தரிசனம் செய்த அவர் கோவிலின் வீல் பாய்ண்ட் முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து கருடாழ்வார் சன்னதியில் தரிசனம் செய்தார். தங்க கொடிமரத்தை வணங்கிய பின் மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்தார். பின்னர் தொடர்ந்து கோவிலின் உள்ளே செல்லும் பொழுது குழந்தைகள், பெரியவர்கள், பக்தர்கள் என அனைவரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தாயார் சன்னதிக்கு பேட்டரி கார் மூலம் சென்ற அவர் ரெங்க நாச்சியாரையும் தரிசனம் செய்தார்.
பின்னர் மீண்டும் சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்து விமான மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
ஆளுநர் வருகையால் ஸ்ரீரங்கம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
