மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மேரா யுவ பாரத் சார்பில் நடத்தப்படும் ‘விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல்’ எனும் தேசிய அளவிலான நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பிரெஸ் கிளப் அரங்கில் இன்று நடைபெற்றது.
இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சி மற்றும் தொலைநோக்கு பார்வையில் பங்கு கொள்ளும் விதமாக தங்களின் கருத்துக்கள் மற்றும் புதுமையான தீர்வுகளை முன்வைக்கும் விதமாக நடத்தப்படும் விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்ச்சி குறித்து மை பாரத், கோயம்புத்தூர் மாவட்ட இளைஞர் அலுவலர் விக்னேஷ், பாரதியார் பல்கலைக்கழகத்தில் என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி மற்றும் மை பாரத் தண்ணார்வலர்கள் கலந்து கொண்டு விளக்கினர்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாவட்ட இளைஞர் அலுவலர் விக்னேஷ், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டதாகவும், அதில் வெற்றி பெற்றவர்கள் பிரதமரோடு நேரடியாக கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்று பெருமை சேர்த்ததாக குறிப்பிட்டார். அதே போல் இந்த ஆண்டும் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் இந்நிகழ்வில் பங்கேற்கும் விதமாக கல்லூரி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளோடு இணைந்து இந்த நிகழ்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தின் கல்வி மையமாக விளங்கும் அதிக கல்லூரிகளை கொண்ட கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள் என நம்புவதாகவும், முதற்கட்டமாக ஆன்லைன் வினாடி வினா போட்டி, அதை தொடர்ந்து கட்டுரை எழுதுதல், மாநில மற்றும் தேசிய அளவிலான நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் பங்கேற்று நிறைவு நிகழ்ச்சியாக வரும் ஜனவரி 10 முதல் 12 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமரோடு வெற்றியாளர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெறும் என குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய பாரதியார் பல்கலைக்கழகத்தில் என்.எஸ்.எஸ் அலுவலர் பார்த்தசாரதி, மத்திய அரசின் இளைஞர் நலன் சார்ந்த திட்டங்களை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் விதமாக, கல்லூரிகளில் என்.எஸ்.எஸ் தன்னார்வலர்களின் மூலம் அதிக அளவில் திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுவதாகவும், அந்த வகையில் விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் குறித்த நிகழ்ச்சி என் எஸ் எஸ் தன்னார்வலர்களின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
