குன்னூர் அருகே வெலிங்டன் பாரத் நகர் பகுதியில் வீட்டின் முன்பு இருந்த பூனையை கவ்வி சென்ற சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் யானை, சிறுத்தை, புலி ,காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சிறுத்தை புலி போன்றவை மனிதர்களை தாக்குவதோடு வீட்டில் வளர்க்கப்படும் ஆடு மாடுகளையும் வேட்டையாடி செல்கிறது.
இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பாரத் நகர் பகுதியில் நேற்று இரவு வந்த சிறுத்தை வீட்டின் முன்பு இருந்த பூனையை வாயில் கவ்வி நீண்ட நேரம் வீட்டின் முன்பு நின்று பின்பு பூனையை தூக்கிச் சென்றது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இதனைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குடியிருப்பு பகுதிக்கு வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
