கோவை, துடியலூர் அருகே பாலியல் சீண்டலுக்கு ஆளான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மனநல காப்பகத்தில் சேர்த்த விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் பொய்யான விளம்பரம் தேடிக் கொள்வதாகச் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
கோவை, கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி எஸ்டிபிஐ நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் கூறியது:
”கடந்த வாரம், துடியலூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் போதை வாலிபன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற போது தெருநாய்கள் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் அறிந்தவுடன் எஸ்டிபிஐ நிர்வாகிகள் உடனடியாக அப்ப பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், காவல்துறையில் புகார் அளித்து உரிய சட்ட நடவடிக்கையும் எடுக்க வைத்தோம் என்றும், இதைதொடர்ந்து பேசிய நிர்வாகிகள், “அப்பெண்ணிற்குத் தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழல் நிலவியதால், அவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் காப்பகத்தில் சேர்க்கத் திட்டமிட்டோம். ஏற்கனவே மேட்டுப்பாளையத்தில் உள்ள காப்பகத்தில் அப்பெண்ணின் சகோதரி தங்கி இருந்ததால், அங்கேயே இவரையும் சேர்க்க விரும்பி கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷிடம் பரிந்துரைக் கடிதம் பெற்றோம். ஆனால், அந்தப் பரிந்துரைக் கடிதத்துடன் மேட்டுப்பாளையம் காப்பகத்திற்குச் சென்ற போது, ‘பிறவியிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவர்களைச் சேர்க்க முடியாது’ எனக் கூறி 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகும் கடிதத்தை நிராகரித்து விட்டனர்.” எனக் கூறினர்.
இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளின் உதவியை நாடியதாகவும், அவர்களின் தொடர் முயற்சியின் பேரில் காரமடையில் உள்ள ‘அன்பு மலர்’ மனநல காப்பகத்தில் அப்பெண் பாதுகாப்பாகச் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
“முழுக்க முழுக்க எஸ்டிபிஐ நிர்வாகிகளின் சொந்த முயற்சியால் நடந்த இந்நிகழ்வை, தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தான் நேரில் நின்று காப்பகத்தில் சேர்த்ததாகவும், த.வெ.க-வின் அறிவுறுத்தலால் தான் இது நடந்ததாகவும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பொய்யான தகவல்களைப் பரப்பி உள்ளனர்.
இதை நாங்கள் முற்றிலுமாக மறுக்கிறோம்.
இதுகுறித்து எம்.எல்.ஏ தரப்பிடம் முறையிட்ட போது, அவரது உதவியாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘தவறுதலாகச் செய்தி மற்றும் புகைப்படங்கள் பரப்பப்பட்டுவிட்டன’ என ஒப்புக் கொண்டு, பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டு உள்ளார்” என எஸ்டிபிஐ நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
