கன்னியாகுமரி மாவட்டம் கோதையாற்றில் தொடர்ந்து தென்படும் முதலையை பிடிக்க முடியாமல், களியல் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலையை பிடிக்க சிறப்பு குழுவும் வரவழைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கோதையாற்றில் முதலை பல்வேறு கோணங்களில் நீந்தும் காட்சிகள் எனக் கூறி புகைப்படக் கலைஞர் ஒருவர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கோதையாறு பாய்ந்து செல்லும் பகுதிகளில் ஆங்காங்கே ஏராளமான பொதுமக்கள் குளிப்பது வழக்கம் .
இந்த நிலையில் இந்த கோதையாற்றில் ஒரு பெரிய முதலை தென்படுவதை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூகவலை தளங்களில் பதிவேற்றம் செய்தனர் .
இதைத் தொடர்ந்து இந்த முதலையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
எனினும் முதலை அகப்படவில்லை .
அவ்வப்போது இந்த முதலை ஆற்றில் தென்படுவதும் பொதுமக்கள் அவற்றை வீடியோ பதிவு செய்வதும் வாடிக்கையாக உள்ளது .
இந்த முதலையை பிடிக்க சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டு அவர்களும் முதலை தென்படுவதாக கூறப்படும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். எனினும் எவ்வித பயனும் ஏற்படவில்லை .
இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் முதலில் தென்பட்ட பதிவுகள் வைரல் ஆனது. இது குறித்து களியல் வனத்துறை அதிகாரியை தொடர்புகொண்டு கேட்டபோது அந்த புகைப்படங்கள் எடுத்ததாக கூறப்படும் நபரை அழைத்து விசாரித்தபோது அந்த படங்களை எந்த பகுதிகளில் நின்று எடுத்ததாக அவர் உறுதிபடுத்தி சொல்லவில்லை என கூறிய அதிகாரி முதலையை பிடிக்க சிறப்பு குழு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
