Headlines

அமைச்சர் பேச்சை அவை குறிப்பில்இருந்து நீக்குங்க : தங்கம் தென்னரசு வைத்த கோரிக்கை

அமைச்சர் பேச்சை அவை குறிப்பில்இருந்து நீக்குங்க : தங்கம் தென்னரசு வைத்த கோரிக்கை

அமைச்சரின் கருத்து தவறான புரிதலை ஏற்படுத்திவிடும் என
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டியதை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வனத்துறை சார்ந்த கேள்வி பதில் நேரத்தில் பேசிய தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், கேரளாவில் காட்டுப்பன்றி வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் தமிழ்நாட்டிலும் காட்டுப்பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் அல்லது அவற்றை சுட்டுக்கொல்ல உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்தார்.

இதற்குப் பதிலளித்த வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார், விவசாயிகளே சில இடங்களில் காட்டுப்பன்றிகளைச் சுடுகிறார்கள்; அதனை நாங்கள் கண்டுகொள்வதில்லை என்ற தவறான கருத்தை அவையில் பதிவு செய்தார்.

இதையடுத்து, அமைச்சரின் பதிலில் இடம்பெற்ற இந்தக் கருத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, விவசாயிகளே பல இடங்களில் காட்டுப்பன்றிகளைச் சுடுகிறார்கள்; ஆனால் நாங்கள் அதைக் கண்டுகொள்வதில்லை என்று அமைச்சர் கூறியிருப்பது, பொதுமக்கள் மத்தியில் மிகவும் தவறான கருத்தை உருவாக்கிவிடும்.

ஏனெனில், வன உயிரினங்கள் அனைத்தும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் கீழ் பாதுகாக்கப்படும் உயிரினங்கள் பட்டியலில் இருப்பவை.

எனவே காட்டுப்பன்றியாக இருந்தாலும் சரி, வேறு எந்த வனவிலங்காக இருந்தாலும் சரி, அவை பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக இருக்கும்போது, அவற்றை சுட்டுக்கொல்லப்படுவதை நாங்கள் கண்டுகொள்வதில்லை; துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை என்று வனத்துறை அமைச்சர் இந்த அவையில் கூறுவது தவறான கருத்தை வெளியில் ஏற்படுத்திவிடும்.

மேலும், இந்தக் கருத்து வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியிலும், சட்டத்தின் அடிப்படையிலும், இந்த அரசின் மீது தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும் என்ற நல்ல நோக்கத்தோடு சுட்டிக்காட்டுகிறேன்.

எனவே அந்தக் கருத்து அவைக் குறிப்பில் இடம்பெறக் கூடாது என்பதையும் அவையின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டிய கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *