சட்டப்பேரவை நேரலை கொடூரமாக உள்ளது. தமிழகத்திற்கு என்ன செய்யப் போகிறோம், தமிழ்நாட்டின் எதிர்காலத் தேவை என்ன என்பது குறித்து முதலமைச்சர் வாய் திறந்து பேச வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தனக்கு கடந்த 30 ஆண்டுகளாக 24 மணி நேரமும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்ததாகவும், தமிழக வெற்றி கழக ஆட்சி வந்ததும் அந்தப் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மாஞ்சோலை மற்றும் மேகமலையில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், அவர்களை வெளியேற்றும் வகையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன என்பது தெரியவில்லை. மாஞ்சோலை, மேகமலை மக்களை அங்கிருந்து வெளியேற்றக்கூடாது.
சொந்த மக்களை அகதிகளாக்கும் வகையில் அவர்களை வெளியேற்ற வேண்டும் என கூறுவது அப்பட்டமான மனித உரிமை மீறல். 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தை முறையாக அமல்படுத்தினால் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேகமலை தொடர்பான சீராய்வு மனுவில் சிறப்பாகவும், வலுவாகவும் வாதங்களை முன்வைக்கும் திறமையான வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை எதிர்த்து மதுரையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக வெற்றி கழகம் அறுதிப்பெரும்பான்மை பெறாத நிலையில், தமிழக வெற்றி கழகத்தை கடுமையாக எதிர்த்த கட்சிகள் தற்போது கூட்டணி வைத்துள்ளன. விஜயை பிரதமர் என தமிழக வெற்றி கழகமும், ராகுல் காந்தியை பிரதமர் என காங்கிரசும் கூறுகின்றன. அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக வெற்றி கழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறது. எனவே, தமிழக வெற்றி கழக கூட்டணி முரண்பட்ட கூட்டணியாக உள்ளது.
கொள்ளு என்றால் வாய் திறக்கும், கடிவாளம் என்றால் வேண்டாம் என்பதுபோல, ஆட்சியில் பங்கு கிடைப்பதற்கு முன்பு ஒன்றும், பங்கு கிடைத்த பிறகு ஒன்றுமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பேசி வருகிறது.
சமூகநீதித்துறை என பெயர் மாற்றம் செய்தபோது வன்னியரசு வரவேற்பு தெரிவித்தார். திருமாவளவன் மாறுபட்ட கருத்தை தெரிவித்தார். தற்போது மீண்டும் ஆதிதிராவிடர் நலத்துறை என பேசுவது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசின் இந்த இரட்டை நிலைப்பாட்டை கண்டித்தும், அமைச்சர் வன்னியரசை கண்டித்தும் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி பரமக்குடியில் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்த உள்ளோம்.
சமூக வலைதளங்கள் மூலம் ஒரு கருத்தை உருவாக்கி பூஜ்ஜியத்தை 15 சதவீதமாகவும், பின்னர் 30 சதவீதமாகவும் மாற்றிக் காட்டியுள்ளனர். மக்கள் உண்மையை தெரிந்து வாக்களித்தார்களா அல்லது ஏமாந்தார்களா என்பது தெரியவில்லை.
அகலக்கால் வைத்தால் அது விஜய்க்கே ஆபத்தாக மாறக்கூடும். ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நடத்துவதற்கு விஜய் முயற்சி செய்ய வேண்டும். தேவையில்லாமல் அகலக்கால் வைத்து ஆபத்தில் சிக்கக்கூடாது. தேசியத் தலைவர் என்பதெல்லாம் பின்னர் ஆகட்டும்.
விஜய் எந்தக் காலத்திலும் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடியாது. இதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளுமா? செருப்பால் அடித்தால் பரவாயில்லை, கருப்பட்டி போதும் என்று காங்கிரஸ்காரர்கள் கூறுவார்களா எனவும் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவை நேரலை கொடூரமாக உள்ளது. தமிழகத்திற்கு என்ன செய்யப் போகிறோம், தமிழ்நாட்டின் எதிர்காலத் தேவை என்ன என்பது குறித்து முதலமைச்சர் வாய் திறந்து பேச வேண்டும். நாள்தோறும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்றாலும், ஒருமுறையாவது செய்தியாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். எதையுமே பேச மாட்டேன் என்றால் எப்படி என கேள்வி எழுப்பினார்.
