Headlines

கவலையில் தவித்த குடும்பத்தினர் : நிம்மதியை ஏற்படுத்திய அதிகாரிகள்

கவலையில் தவித்த குடும்பத்தினர் : நிம்மதியை ஏற்படுத்திய அதிகாரிகள்

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக புனிதப் பயணம் சென்ற நெல்லை சந்திப்பு பகுதியைச் சேர்ந்தவரை சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியாததால் அவரது குடும்பத்தினர் கவலை அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், அவரது வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி, பின்னர் புனிதப் பயணம் சென்றவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது குடும்பத்தினருடன் பேச வைத்து ஆறுதல் தெரிவித்தனர்.

நெல்லை சந்திப்பு மேலவீரராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், வயது 70. இவர் தனது மனைவியுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். சுப்பிரமணியன் கடந்த 17-ஆம் தேதி ஈரோடு பகுதியைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் நேபாளத்தின் காத்மாண்டு, கைலாயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆன்மிகப் பயணம் சென்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டது. இதனால் ஆன்மிகப் பயணம் சென்ற சுப்பிரமணியனையும் அவரது குடும்பத்தினரால் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை வருவாய் வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், சுப்பிரமணியனின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து சுப்பிரமணியனை தொடர்பு கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது சுப்பிரமணியன் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்ததுடன், அவரை அவரது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச வைத்தனர். இதையடுத்து குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.

மேலும், சுப்பிரமணியனின் நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் அதிகாரிகள் எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தனர்.

தொடர்ந்து, அவர்களுக்கு ஏதேனும் உதவி அல்லது அவசரத் தேவை ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் என்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்திச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *