Headlines

ஏஐ, ரோபோட்டிக்ஸ், செமிகண்டக்டர், குவாண்டம் தொழில்நுட்ப துறைகளுக்கு இளைஞர்கள் தயாராக வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஏஐ, ரோபோட்டிக்ஸ், செமிகண்டக்டர், குவாண்டம் தொழில்நுட்ப துறைகளுக்கு இளைஞர்கள் தயாராக வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஈரோட்டின் பெருந்துறையில் இன்று நடைபெற்ற கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அறக்கட்டளையின் நிறுவனர் தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ‘அறிவுக்கூடம்’ திறப்பு விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்.

தமிழ்நாடு மற்றும் கேரள ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், உச்சநீதிமன்ற நீதியரசர் திரு. எம். எம். சுந்தரேஷ், அப்போலோ மருத்துவர் திரு. கே. ஆர். பழனிசாமி, K.V.I.T. அறக்கட்டளையின் தலைவர் திரு. தேவராஜன், World Community Service Center தலைவர் டாக்டர் எஸ். கே. எம். மயிலானந்தம், K.V.I.T. அறக்கட்டளையின் செயலாளர் திரு. ஆர். ஆர். சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கொங்கு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தினக் கொண்டாட்டத்திலும், ‘அறிவுக்கூடம்’ திறப்பு விழாவிலும் பங்கேற்பதில் மிகுந்த மனநிறைவு அடைவதாகக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், ஆன்மிகம், ஞானம் மற்றும் தியானப் பயிற்சிக்காகவும் தனிக்கூடம் அமைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

கொங்கு மண்ணின் சிறப்பை எடுத்துரைத்த திரு. சி. பி. ராதாகிருஷ்ணன், அனைவரையும் வரவேற்று, அரவணைத்து, உபசரிப்பது கொங்கு மண்ணின் இயல்பான பண்பு என்றார்.

“உலகத்திற்கு இந்தியாவின் விருந்தோம்பல் ஒரு எடுத்துக்காட்டு; இந்தியாவில் தமிழகத்தின் விருந்தோம்பல் ஒரு எடுத்துக்காட்டு; தமிழகத்தில் விருந்தோம்பலுக்கு ஓர் எடுத்துக்காட்டு எது என்று கேட்டால், நம்முடைய கொங்கு மண் என்று பெருமையுடன் சொல்ல முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.

எந்த ஒரு மகத்தான முயற்சிக்கும் ஒரு நல்ல சிந்தனையே மூலக்காரணமாக அமைகிறது என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், 41 பேர் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்தக் கல்வி நிறுவனங்கள் இன்று மிகப்பெரிய கல்விக் குடும்பமாக வளர்ந்திருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

தாம் பள்ளியில் படித்த காலத்தில், 1962-ஆம் ஆண்டு வெளியான ஒரு புத்தகத்தில் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பட்டதாரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததைப் படித்ததாகக் குறிப்பிட்ட அவர்,கொங்கு கல்வி நிறுவனங்கள் உருவான பின்னர் இப்பகுதியில் கல்வி குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது என்று கூறிய அவர், பெருந்துறை போன்ற சிறிய நகரங்களை உலகளாவிய கல்வி மற்றும் தொழில்நுட்ப மையங்களாக மாற்றியதில் இந்த நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானது என்றார்.

ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பெருந்துறையை நோக்கி வந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஈடுபடும் அளவுக்கு இப்பகுதி வளர்ந்திருப்பது, கல்வி நிறுவனங்களின் தொலைநோக்குப் பார்வைக்கு சான்றாகும் என்று அவர் தெரிவித்தார்.

“யார் நல்லது செய்தாலும், அந்த நல்லதைப் பாராட்டுவதும், அந்த நல்ல செயல்களைச் செய்தவர்களைப் போற்றுவதும்தான் ஒரு நல்ல சமுதாயத்தைக் கட்டமைக்க உதவும். எங்கே நல்லது இருக்கிறதோ, அதைத் தேடிச் சென்று நாம் ஆதரிக்க வேண்டும்” என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார்.

மகாகவி பாரதியாரின்,
“அன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”

என்ற வரிகளை மேற்கோள் காட்டிய அவர், கல்வி வழங்குவதற்கு ஈடாக உலகில் வேறு எந்த தர்மமும் இல்லை என்றார்.

K.V.I.T. கல்விக் குழுமத்தின் மூலம் இதுவரை ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் கல்வி கற்றிருப்பது மிகப்பெரிய சாதனை என்று குறிப்பிட்ட அவர், சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் மதிப்புமிக்க சேவைகளை வழங்கி வரும் சிறந்த ஆளுமைகளை இந்தக் கல்விக் குடும்பம் உருவாக்கியிருப்பது பெருமைக்குரியது என்றார்.

புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ‘அறிவுக்கூடம்’ கல்விக் குழுமத்தின் அடுத்த முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், மன அமைதிக்கும் அறிவின் கூர்மைக்கும் உள்ள தொடர்பை வலியுறுத்தினார்.

“நாம் எப்போது அமைதியாக இருக்கிறோமோ, அப்போதுதான் நம்முடைய அறிவு மிகக் கூர்மையாகச் செயல்படும்” என்றார்.

மேல்நிலை நிர்வாகத்தில் சிக்கலான பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது மனதை அமைதியாக வைத்திருப்பது சரியான தீர்வுகளை எளிதாகக் கண்டறிய உதவும் என்று குறிப்பிட்ட அவர், யோகா மற்றும் தியானம் மன அமைதிக்கு மிகவும் அவசியமானவை என்றார்.

அடிப்படைக் கல்வியோடு நின்றுவிடாமல், மாணவர்கள் ஆராய்ச்சி சார்ந்த கல்வியை நோக்கி முன்னேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“ஒருமுறை பட்டம் பெற்றுவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்ற காலம் இப்போது இல்லை. ஒவ்வொரு நாளும் நம்மை நாமே கல்வியறிவு பெற்றவர்களாகவும், நவீன மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை நாமே தயார்படுத்திக் கொண்டும் இருக்க வேண்டும்” என்றார்.

செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், குறைக்கடத்தி தொழில்நுட்பம், குவாண்டம் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் வேகமாக மாற்றங்கள் நிகழ்ந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர்,“மாற்றம் மட்டும்தான் மாறாதது”என்றார்.

ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் காப்புரிமை ஆகிய துறைகளில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உலகளாவிய போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கோவிட்-19 பெருந்தொற்றின்போது இந்தியா தடுப்பூசி உருவாக்கம் மற்றும் விநியோகத்தில் மேற்கொண்ட முயற்சிகளைச் சுட்டிக்காட்டிய குடியரசு துணைத் தலைவர், மனிதகுல நலனையும் உலக அமைதியையும் இந்தியா எப்போதும் முன்னிறுத்தி வருவதாகக் கூறினார்.

“உலகின் சில பகுதிகளில் ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசியின் விலை 5,000 முதல் 7,500 டாலர் வரை விற்கப்பட்டதாகக் கூறப்பட்டது. உலகில் எத்தனை பேரால் அந்த விலையைச் செலுத்த முடியும்? ஆனால், இந்த மண்ணின் மகத்தான பண்பை அடிப்படையாகக் கொண்டு, மோடிஜி ஒரு முக்கியமான முடிவை எடுத்தார் — இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று.அதுமட்டுமல்ல. இந்தியா 104 நாடுகளுக்கு கோவிட் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியது.இதுதான் இந்த மண்ணின் மகத்துவம்.” என்றார்.

“மனிதகுலம் ஒன்றாக வாழ வேண்டும்; ஏழை நாடுகளைப் புறக்கணித்து பணக்கார நாடுகள் மட்டும் வளரக்கூடாது. அனைவரும் ஒன்றாக வளர வேண்டும். இதுதான் பாரதத் தாயின் தத்துவம்” என்றார்.

இந்தியா உலகின் முன்னணி நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற இலக்கை வலியுறுத்திய அவர், கடந்த ஆண்டுகளில் இந்தியா உலகப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகக் கூறினார்.

“ஆபிரகாம் லிங்கன் வெள்ளையர்களிடம் அடிமைகளாகப் பணியாற்றிய கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடினார். மனித அடிமைத்தனத்திற்கு முடிவு கட்டிய மிகப்பெரிய தலைமை ஆபிரகாம் லிங்கனுடையது. மனிதகுலத்திற்காக அவர் செய்த இந்த மகத்தான பங்களிப்பிற்காக, உலகமே அவருக்குத் தலைவணங்க வேண்டும்.அதேபோல், நமது பிரதமர் மோடிஜியும் ஏழை மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்காகத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறார்.கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் 25 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இது ஒரு தனிப்பட்ட அரசியல் தலைமையின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும்.” என்றார்.

அரங்கில் இருந்த இளம் மாணவர்களிடம் பேசிய குடியரசு துணைத் தலைவர், மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டுக் கொள்ளாமல், தங்களுடைய தனித்திறமையை உணர்ந்து தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

“கடவுள் ஒவ்வொரு மனிதரையும் ஒரே திறமையுடனோ, ஒரே ஆற்றலுடனோ, ஒரே சிந்தனையுடனோ படைக்கவில்லை. உங்களால் எது சிறப்பாகச் செய்ய முடியுமோ, அதைச் செய்யுங்கள். ஆனால், அதைத் தொடர்ந்து செய்யுங்கள்” என்றார்.

ஆரம்பத்தில் ஒரு அங்குலமாகத் தொடங்கும் முன்னேற்றம், தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முயற்சியால் சில அடிகளாகவும், பின்னர் கிலோமீட்டர்களாகவும் மாறும் என்று அவர் குறிப்பிட்டார்.

சுவாமி விவேகானந்தரின் “நீ என்ன நினைக்கிறாயோ, அதுவாகவே நீ மாறுவாய்” என்ற சிந்தனையை மேற்கோள் காட்டிய அவர், இளைஞர்கள் தங்களுடைய இலக்கைத் தெளிவாக நிர்ணயித்து, அதை நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

K.V.I.T. அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்கள் மேலும் மேலும் வளர்ந்து, தலைமுறைகளைத் தாண்டியும் தங்களது பயணத்தைத் தொடர வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வாழ்த்தினார்.

உலகளாவிய அறிவுச் சமூகத்தின் சரணாலயமாக இந்தக் கல்வி நிறுவனங்கள் உருவாக வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

நிறுவனத்தின் நிர்வாகிகள், பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்த அவர், இந்தக் கல்வி நிறுவனங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து மகத்தான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

தமிழ் இலக்கியத்தின் உயர்ந்த சிந்தனையை எடுத்துரைக்கும் வகையில் புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டிய குடியரசு துணைத் தலைவர், தமக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும், எதிர்கால தலைமுறைகளுக்காகவும் உழைக்கும் உயர்ந்த பண்புடையவர்களால்தான் உலகம் தொடர்ந்து இயங்குகிறது என்றார்.

அந்த வகையில், 41 பேரின் தொலைநோக்குச் சிந்தனையாலும் அர்ப்பணிப்பாலும் உருவாக்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனங்கள் காலத்தைக் கடந்து தொடர்ந்து வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கொங்கு பொறியியல் கல்லூரியின் தொழில்நுட்பத் தொழில் காப்பகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் குடியரசு துணைத் தலைவர் பார்வையிட்டார். இதில் புதுமையான திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கழக அறக்கட்டளையின் (KVITT) அறிவுக்கூடம் – ஆராய்ச்சிப் பூங்கா, மருந்தியல் கல்லூரி, கொங்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, கிளவுட் கிச்சன் ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டும் விழா கல்வெட்டுகளையும் குடியரசு துணைத் தலைவர் திறந்து வைத்தார்.

கல்லூரி மற்றும் அறக்கட்டளையுடன் தொடர்புடைய சிறப்புமிக்க ஆளுமைகளையும் அவர் கௌரவித்தார். குடியரசு துணைத் தலைவர் முன்னிலையில், தொழில்துறை–கல்வித்துறை ஓத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கும் ஊக்கம் அளிக்கும் ஆங்கர் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அறிவுக்கூடம் – ஆராய்ச்சிப் பூங்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *