வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூர் ஊராட்சி நத்தமேடு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதனிடையே காலை முதல் நத்தமேடு கிராமத்தில் சேர்ந்த மூன்று ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் உள்ளிட்ட எட்டு பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இது குறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சுகாதாரத்துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பாக நத்தமேடு கிராமத்தில் மருத்துவ முகாம் மற்றும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
சுகாதாரத்துறை சார்பாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வயிற்றுப்போக்கு மற்றும் இதர பாதிப்புகள் ஏதாவது உள்ளதா என கணக்கெடுக்கும் பணியினை மேற்கொண்டனர்.
மேலும் ப்ளீச்சிங் பவுடர் கிருமி நாசினி உள்ளிட்டவை தெளித்து தீவிர சுகாதாரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு தற்போது தற்காலிகமாக நத்தமேடு கிராமத்திற்கு டிராக்டர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அங்கு தற்போது முழு வீச்சில் சுகாதாரத் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலும் புதிய பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கிராமத்தில் உள்ள 30,000 லிட்டர் மேல்தேக்க குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
