திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி ரூ.2 கோடி மதிப்பிலான சொகுசு கார்(BMW) ஒன்று அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. குண்டடம் அடுத்த வேங்கிபாளையம் அருகே சென்றபோது, முன்னே சென்று கொண்டிருந்த சரக்கு வேனை கார் முந்த முயன்றுள்ளது.
அப்போது எதிர்பாராத விதமாக வேனின் பின்புறம் கார் பலமாக மோதியது.
மோதிய வேகத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் வட்டமடித்து கவிழ்ந்தது. தொடர்ந்து சென்டர் மீடியனை உடைத்துக் கொண்டு, திருப்பூர் நோக்கி செல்லும் எதிர்ப்புற சாலையில் பாய்ந்து சென்று நின்றது.
கார் மிக அதிவேகத்தில் வந்ததால், விபத்தின்போது சுமார் 100 அடி தூரத்திற்கு சாலையில் இழுத்துச் செல்லப்பட்டது. மேலும் சென்டர் மீடியனில் கார் மோதிய வேகத்தில், அதன் பின்புற டயர் கழன்று சுமார் 200 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.
விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள், காரில் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரின் அனைத்து ஏர்பேக்குகளும் திறந்ததால், காரிலிருந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட போதிலும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குண்டடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
காரில் பயணித்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேகமே இந்த விபத்துக்கு முதன்மை காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள சொகுசு கார் முற்றிலும் நொறுங்கி உருக்குலைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
