தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கே.வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் தாய்லாந்து நாட்டில் ஹோட்டல் வேலைக்குச் சென்ற நிலையில், அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இளைஞரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதுடன், அவரது உயிரிழப்புக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக அரசுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான மதன் ராஜா, உயிரிழந்த ஈசாக்கின் குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்ததுடன், இச்சம்பவத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, தாய்லாந்தில் இருந்து ஈசாக்கின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் உறுதுணையாக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கே.வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் – பொன்னம்மாள் தம்பதியினருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதில் பெருமாள் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்துள்ளார்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பொன்னம்மாள் தனது மூன்று மகன்களையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்து, அவர்கள் வேலைக்குச் செல்லும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார். இவர்களது இளைய மகன் ஈசாக் (23), கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்போது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஈசாக் அறிமுகமாகியுள்ளார். அந்த நபர், ஈசாக்கை தாய்லாந்து நாட்டிற்கு அழைத்துச் சென்று, தனது ஹோட்டலில் வேலைக்கு சேர்த்ததாக கூறப்படுகிறது.
தாய்லாந்தில் அந்த ஹோட்டலில் ஈசாக் மட்டுமே வேலை செய்து வந்ததாகவும், இதனால் அவருக்கு அதிகப்படியான வேலைப்பளு இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஈசாக் அடிக்கடி வீட்டிற்கு போன் செய்து, தனது குடும்பத்தினரிடம் வேதனையுடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ஈசாக்கிற்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி ஈசாக் ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளார்.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஈசாக் தனது அண்ணன் இமானுவேலுக்கு போன் செய்து, தன்னை ஹோட்டலில் உள்ளவர்கள் கொடுமைப்படுத்துவதாகவும், அதனால் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்களிடம் மீண்டும் மாட்டிக்கொண்டால் தன்னை அடித்துக் கொலை செய்துவிடுவார்கள் என்றும் ஈசாக் தனது அண்ணனிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர், அன்று மதியமே ஈசாக்கின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி தாய்லாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஈசாக் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஹோட்டல் உரிமையாளர் வாட்ஸ்அப் கால் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அப்போது ஈசாக்கிடம் போனை கொடுக்குமாறு குடும்பத்தினர் கேட்டபோதும், அவரிடம் போன் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், வீட்டில் உள்ளவர்கள் ஹோட்டல் உரிமையாளரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் அவர் போனை எடுக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் இருந்து தாய்லாந்தில் உள்ள ஹோட்டல் உரிமையாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தபோது, ஈசாக்கின் உடல்நிலை குறித்த மருத்துவமனை அறிக்கையை வாங்கி அனுப்புவதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த மருத்துவ அறிக்கை இதுவரை அனுப்பப்படவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று ஆகஸ்ட் 28-ஆம் தேதி மாலை தாய்லாந்தில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் மீண்டும் ஈசாக்கின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு, ஈசாக் உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் குடும்பத்தினர் இடி விழுந்தது போல் உறைந்து போயினர்.
“எனது தம்பியை அடித்துக் கொன்று விட்டார்கள்” – அண்ணன் இமானுவேல்
இதுகுறித்து ஈசாக்கின் அண்ணன் இமானுவேல் கூறுகையில்,
“எனது தம்பி ஈசாக்கை சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டிற்கு மூளைச்சலவை செய்து கூட்டிச் சென்று, அதிகப்படியான வேலையை கொடுத்து, சம்பளத்தையும் கொடுக்காமல் சித்திரவதை செய்து, எனது தம்பியை அடித்துக் கொன்று விட்டார்கள்.
கடைசி வரை எனது தம்பி சிகிச்சையில் இருப்பதாக அவர்கள் தகவல் தெரிவித்தனர். அப்போது எனது தம்பியிடம் போனை கொடுக்குமாறு கேட்டபோதும் கொடுக்கவில்லை. மேலும், எனது தம்பியிடம் தொடர்புகொள்ளவும் முடியவில்லை.
கடைசியாக எனது தம்பி கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி என்னிடம் பேசியதுதான் கடைசி. இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தோம்.
அதன் பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் எங்களிடம் விசாரணை மேற்கொண்டு, தாய்லாந்து நாட்டில் உள்ள ஹோட்டல் உரிமையாளரிடம் தொலைபேசியில் பேசினர். அப்போது ஈசாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவ அறிக்கையை அனுப்பி வைப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால், அந்த அறிக்கையை அனுப்பவில்லை.
இந்த நிலையில் எனது தம்பி உயிரிழந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.
எனது தம்பியின் இறப்பு குறித்து தகவல் அறிந்ததும் அமைச்சர் மதன் ராஜா என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். தாய்லாந்து நாட்டில் இருந்து எனது தம்பியின் உடலை கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து ஈசாக்கின் உடலை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும், தங்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
“சாப்பிடக்கூட நேரமில்லை, தூங்கக்கூட நேரமில்லை என கூறினார்” – உறவினர் பாக்கியம்
இதுதொடர்பாக ஈசாக்கின் உறவினர் பாக்கியம் கூறுகையில்,
“எனது உறவினரின் மகனான ஈசாக், பெரிய ஹோட்டலில் வேலை கிடைத்துவிட்டது எனக் கூறி தாய்லாந்து நாட்டிற்குச் சென்றார். ஆனால், அங்கு ஈசாக் மட்டுமே சிறிய ஹோட்டலில் தனியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அடிக்கடி வீட்டிற்கும் தகவல் தெரிவித்து வந்துள்ளார். மேலும், சாப்பிடக்கூட நேரமில்லை, தூங்குவதற்கும் நேரமில்லை என வேதனையுடன் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்து வந்துள்ளார்.
மேலும், மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையில், வீட்டில் உள்ளவர்களிடம் போன் செய்து நான் ஊருக்கு வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
அப்போது வீட்டில் உள்ளவர்கள், ஹோட்டல் உரிமையாளரிடம் கேள் என கூறியுள்ளனர். மேலும், அங்கு வேலை கடினமாக இருப்பதால் ஈசாக்கை எங்களது நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு ஹோட்டல் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி வீட்டில் உள்ளவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஈசாக்கிற்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகு வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் போன் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், நேற்று மாலை மீண்டும் போன் செய்து ஈசாக் இறந்துவிட்டதாக தெரிவித்தது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.
வேறு ஹோட்டல் வேலைக்குப் போய், அங்கு அவர்கள் ஈசாக்கை அடித்துக் கொன்று விட்டார்கள் என நாங்கள் வேதனையுடன் சந்தேகிக்கிறோம்.
படித்து வேலைக்குச் சென்று குடும்பத்தை உயர்த்தலாம் என்று சென்ற ஈசாக், அங்கு உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இதுதொடர்பாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான மதன் ராஜா எங்களை செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார். மேலும், தாய்லாந்து நாட்டில் இருந்து ஈசாக்கின் உடலை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்” என தெரிவித்தார்.
தாயாரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மதன் ராஜா
இதற்கிடையே, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா, தாய்லாந்து நாட்டில் உயிரிழந்த ஈசாக்கின் தாயார் பொன்னம்மாளை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது பொன்னம்மாள் அமைச்சரிடம் கூறுகையில்,
“எனது மகன் ஈசாக்கை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக தாய்லாந்து நாட்டிற்கு ஹோட்டல் வேலைக்கு கூட்டிச் சென்றனர். அங்கு அதிகப்படியான வேலையை கொடுத்து, சித்திரவதை செய்து, சம்பளமும் கொடுக்காமல் சித்திரவதை செய்து அடித்துக் கொலை செய்துள்ளனர்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த எங்களுக்கு எனது மகனின் உயிரிழப்புக்கு நீதி வேண்டும். எனது மகனின் உடலை ஊருக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பொன்னம்மாளுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் மதன் ராஜா, இச்சம்பவம் தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று, ஈசாக்கின் உயிரிழப்புக்கு நீதி கிடைத்திடவும், தாய்லாந்தில் இருந்து ஈசாக்கின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும் உரிய நடவடிக்கையை விரைந்து எடுப்பதாகவும், குடும்பத்தினருக்கு தொடர்ந்து உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தாய்லாந்து நாட்டில் ஹோட்டல் வேலைக்குச் சென்ற இளைஞர் ஈசாக் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஈசாக்கின் மரணம் தொடர்பான உண்மை நிலை குறித்து உரிய விசாரணை நடத்தி, அவரது உடலை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்பதே குடும்பத்தினரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
