வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மது போதையில் இருந்த 5 பேர் கும்பல், ஒருவரின் தலையில் மது பாட்டில் உடைக்கும் வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் வேலூர் பழைய பேருந்து நிலையத்திற்குள் நேற்று இரவு மது போதையில் இருந்த 5 இளைஞர்கள் கூட்டமாக ஒருவரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர்.
அந்த 5 பேரில் ஒருவர் கையில் வைத்திருந்த மதுபாட்டிலால் எதிராளியின் தலையில் ஓங்கி அடித்து உடைத்துள்ளார்.

இதனால் ரத்தம் வழிய தரையில் விழுந்தவரை மற்றவர்களும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தலையில் பாட்டிலால் அடிக்கும் காட்சி வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று இரவு முதல் வேகமாக பரவியது. வீடியோ வைரலானதை அடுத்து வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பேருந்து நிலையத்திற்குள் இது போன்ற தாக்குதல் சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
