Headlines

அழுகிய நிலையில் சிறுவர்கள் சடலம் : ஆலங்காயத்தில் நடந்தது என்ன?

அழுகிய நிலையில் சிறுவர்கள் சடலம் : ஆலங்காயத்தில் நடந்தது என்ன?

ஆலங்காயம் அருகே விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் 2 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே
பெத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில், தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்கிவிட்டு கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார்.

அப்போது கிணற்றுக்குள் இரண்டு சடலங்கள் நீரில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக மின் மோட்டாரை நிறுத்திவிட்டு ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலங்காயம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், கிணற்றுக்குள் இருந்த இரண்டு சிறுவர்களின் அழுகிய நிலையில் இருந்த சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், மீட்கப்பட்டவர்களில் ஒருவருக்கு சுமார் 16 வயதும், மற்றொருவருக்கு சுமார் 9 வயதும் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களின் அடையாளம் மற்றும் அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

இதையடுத்து ஆலங்காயம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களில் யாரேனும் காணாமல் போயுள்ளனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இரண்டு சிறுவர்களும் கிணற்றில் விழுந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து ஆலங்காயம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *