புதுச்சேரி,கோவிந்த சாலை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். ஆட்டோ ஓட்டுனரான இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
மேலும் இவருக்கு திருமணமாகி சரோஜினி (28) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு 12 மணியளவில் ஆனந்த் அவரது வீட்டின் வெளியே நின்றிருந்தபோது,3 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென ஆனந்தனை சரமாரியாக அடித்துள்ளனர்.
உடனே அவர்களிடமிருந்து ஆனந்தன் தப்பி ஓடியுள்ளார். ஆனால் மர்ம கும்பல் ஆனந்தனை பயங்கர ஆயுதங்களுடன் விடாமல் துரத்தி சென்றதது. அப்போது ஆனந்தன் கட்டுமான பணி நடைபெற்று வரும் உப்பானறு மேம்பாலத்துக்கு சென்றபோது,மர்ம கும்பல் அவரைச் சுற்றி வளைத்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களாக சரமாரியாக வெட்டியதில்,ஆனந்தன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உருளையன்பேட்டை போலீசார் கொலை செய்யப்பட்ட ஆனந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இக்கொலை
சம்பவம் குறித்து உயிரிழந்த ஆனந்தனின் மனைவி சரோஜினி அளித்த புகாரின் பேரில் போலீசார் மர்ம நபர்கள் 3 பேர் மீதுவழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில்,
ஆனந்தன் நேற்று இரவு 3 பேருடன் நகரப் பகுதியில் உள்ள மதுபான கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது, போதையில் அவர்களுக்கு ஏற்பட்ட தகராறில் ஆனந்தனை துரத்தி சென்று வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஆனந்தன் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? வேறு ஏதேனும் காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், கடந்த 2023ம் ஆண்டு பிரபல ரவுடி பரத் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆனந்த் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
