Headlines

அன்னவாசல் அருகே கி.மு.6-ம் நூற்றாண்டு தொல்பொருட்கள் கண்டெடுப்பு

அன்னவாசல் அருகே கி.மு.6-ம் நூற்றாண்டு தொல்பொருட்கள் கண்டெடுப்பு

அறந்தாங்கி அரசுக் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் காளிதாஸ் பேராசிரியர் மணிவண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் புதுக்கோட்டை அன்னவாசல் ஒன்றியம் வெள்ளாஞ்சார் கிராமத்தில் வரலாற்றுக் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சாலை ஓரத்தில் உள்ள திடல் ஒன்றில் ஐயனார் சிலை ஒன்று இருப்பதைக் கண்டறிந்தனர்.

ஐயனார் உட்குடி ஆசனத்தில் அமர்ந்து, இடது காலையும் இடுப்பையும் இணைக்கிற யோகப்பட்டையை அணிந்துள்ளார்.

அன்னவாசல் அருகே கி.மு.6-ம் நூற்றாண்டு தொல்பொருட்கள் கண்டெடுப்பு

காதோலைச் சுருள், கைக்காப்பு, கழுத்தணி, கண்ட சரப்பளி, இடைக்கச்சு, கால்த் தண்டை அணிந்து கையில் சாட்டையுடன் நெற்றி ஞானப் பொறிகாட்டி அட்டாங்கயோக நிலையில் அமர்ந்துள்ளார்.

இருபுறமும் பூரண புஷ்கலா தேவியர் உள்ளனர். இக்கோவிலுக்குச் சற்றே தள்ளி பள்ளமான பகுதியில் சுடுமண் சிற்பங்களும் கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் கிடைக்கின்றன.

இங்குள்ள சுடுமண் சிற்பங்களை நோக்கும் பொழுது, இவை சங்க காலத்திற்கு முற்பட்டவை என அறுதியிட்டுச் சொல்லலாம்.கி.மு 2000 முதல் 2600 வரை இதன் காலத்தைக் குறிப்பிடலாம். இவை, கீழடியில் கிடைத்த சுடுமண் சிற்பங்களைப் போலவே உள்ளன.

வெள்ளாஞ்சர் கோனாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகும் . இவ்வூர் சங்க கால மன்னனாகிய பனையனின் ஊராகும்.

பொதுவாக சங்க காலம் தொட்டு அய்யனார் சாத்தர் சாஸ்தா என்றெல்லாம் வணங்கப்பட்டு வரும் வழிபாட்டு முறையானது நம் தமிழ் மக்கள் வழிவந்த மன்னர்களை, முன்னோர்களை வழிபட்டு வருவதாகக் கொள்ளலாம்.

பாண்டியர்களின் இரட்டைக் கயல் மீன் சின்னத்தின் நடுவில் சாட்டை உருவம் பொறித்திருக்கும். பாண்டியர்களில் ஆழிவடிவலம்ப நின்ற பாண்டியன் , நிலந்தரு திருவில் பாண்டியன், நீர்விழவின் நெடியோன் ஆகிய மன்னர்களை வைத்து இந்த ஐயனார் வழிபாடு வந்திருக்க கூடும். புறநானூற்றில் (395) போற்றிப் பாடப்படும் பிடவூர் அறச்சாத்தன் என்ற ஐயனார் மன்னர் வேண்மா வழிபட்டதாகும்.கி.பி 2 ஆம் நூற்றாண்டு வாக்கில் மாங்குளத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் சாத்த வழிபாடு செய்துள்ளான்.

இலங்கை அனுராதபுரத்து ஐயனார் சிற்பம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொடுவாய் ஐயனார் 1200 ஆண்டுகள் பழமையானது. இது போல் தொல்பழங்காலத்து வரலாற்றுச் சிறப்பு மிக்க தான கோனாட்டு வெள்ளாஞ்சார் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட அய்யனார் சிற்பமும் சுடுமண் சிற்பங்களும் முதல் நூற்றாண்டு எனக் கொள்ளலாம் .

தொல்லியல் துறை இவ்விடத்தை ஆய்வு செய்தால் பல்வேறு வரலாற்றுச் சின்னங்களை மீட்டெடுக்கலாம்.

இம்மாதிரியான வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டியது நமக்கும் அரசுக்கும் உள்ள கடமையாகும். என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *