தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்ட பகலில் முதியவரை காரில் கடத்தி சென்று தங்க நகைகளை பறித்த இளம் பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலக்கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சந்தானகிருஷ்ணன்,72. என்ற முதியவரை தலையணை வாங்குவது போல் நடித்து சிலர் காரில் கடத்தி செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பட்ட பகலில் முதியவரை கடத்தி சென்ற சம்பவம் கடையநல்லூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
சற்று தொலைவில் முதியவரை கீழே இறக்கி விட்டு சென்ற நிலையில், முதியவர் சந்தானகிருஷ்ணன் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டது நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த சந்துரு (25) மற்றும் கங்கை கொண்டான் பகுதியை சேர்ந்த மனோ (24) குலவணிகர்புரம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (26) கடைய நல்லூர் பகுதியை சேர்ந்த சுபா என்ற சுபலட்சுமி (22) ஆகிய நான்கு பேரும் என்பது தெரிய வந்த நிலையில், அவர்களை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
