நெல்லை அருகே பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட தகராறில் முன்னாள் ஊராட்சி தலைவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (40). இவர் அப்பகுதியில் பன்றிகள் வளர்த்து தொழில் செய்து வந்தார். மேலும் இவர்
சிறைக்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார்.
இந்தநிலையில் நடராஜன் வளர்த்து வந்த பன்றிகள், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (25) என்பவரது வீட்டின் அருகே சென்று மண்ணைக் கிளறியுள்ளன. மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த வைக்கோல் போரையும் பன்றிகள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி, நடராஜனிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென முற்றியது.
இதில் ஆத்திரத்தின் எல்லைக்குச் சென்ற கருப்பசாமி, தனது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து நடராஜனை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த நடராஜன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த நடராஜனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், நடராஜன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இக்கொலை சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கருப்பசாமியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
