திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகன் சஞ்சு. இவர் ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், கடந்த 19-ம் தேதி ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்காக வெளியே சென்ற சஞ்சு, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவன் கிடைக்காததால், ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவனின் செல்போன் எண்ணை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, மாணவனின் குடும்பத்தினருக்கு, மாணவன் தங்களுடன் இருப்பதாகவும், 2 லட்சம் கொடுத்தால், மாணவனை அனுப்புவதாக கேட்டு, செல்போன் மூலம் மிரட்டல் வந்துள்ளது, அதனை தொடர்ந்து, அந்த எண்ணை, மாணவனின் குடும்பத்தினர், காவல்துறையினருக்கு, அளித்துள்ளனர். பின்னர் செல்போன் சிக்னல் வைத்து, காவல்துறையினர் சோதனை செய்த போது, மாணவன் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஆலங்காயம் போலீசார் பெங்களூருக்கு சென்று, அங்கு மாணவனுடன், பதுங்கியிருந்ததாக கூறப்படும் 3 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும், அவர்களுடன் இருந்த மாணவன் சஞ்சுவையும் போலீசார் பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பாக ஹரிஷ், புவனேஷ், தேசிங் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து ஆலங்காயம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் கடத்தப்பட்டதற்கான காரணம் என்ன கடத்தல் நாடகமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்காக சென்ற 12-ம் வகுப்பு மாணவன் மாயமான நிலையில், செல்போன் எண்ணை வைத்து போலீசார் துரிதமாக விசாரணை நடத்தி பெங்களூரில் இருந்து மாணவனை மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
