தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புகழ்பெற்ற சங்கரநாராயணர் கோவில் யானை ‘கோமதி’யின் உடல்நலம் மற்றும் பராமரிப்பு குறித்து வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்றதும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான திருத்தலங்களுள் ஒன்றாக சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் – கோமதி அம்பாள் திருக்கோவில் விளங்குகிறது.
இந்த ஆன்மிக தலத்திற்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், கோவிலில் உள்ள ‘கோமதி’ என்ற பெண் யானையிடம் தங்களது குழந்தைகளுடன் வந்து ஆசி பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், 33 வயதான கோவில் யானை ‘கோமதி’யின் உடல்நலன் மற்றும் பராமரிப்பு குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா மற்றும் வன கால்நடை மருத்துவர் சாந்தகுமார் தலைமையிலான வனத்துறையினர் திருக்கோவிலுக்கு நேரில் வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, யானையின் எடை, உயரம் உள்ளிட்ட உடல் சார்ந்த விவரங்கள் பரிசோதிக்கப்பட்டன. மேலும், யானைக்கு வழங்கப்படும் உணவு முறைகள், தினசரி நடைபயிற்சி, குளியல் உள்ளிட்ட பராமரிப்பு முறைகள் குறித்து யானைப்பாகனிடம் அதிகாரிகள் விரிவாகக் கேட்டறிந்தனர்.
ஆய்வின் முடிவில், யானையின் உடல்நிலையைத் தொடர்ந்து இதேபோன்று சீரான முறையில் பராமரிக்குமாறு கோவில் நிர்வாகத்திற்கும், பாகனுக்கும் வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வின் போது, சங்கரன்கோவில் கோவில் துணை ஆணையர் ஞானசேகரன், கோவில் நிர்வாக அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.
