தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே அரசு பள்ளி ஒன்றில் பயிலும் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்த புகாரில் கணித ஆசிரியர் போஸ்கோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த அரசு பள்ளியில்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அப்பள்ளியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கணித ஆசிரியராக பணியாற்றி வரும் தங்கவேல் என்பவர், பள்ளி மாணவிகளின் செல்போன்களுக்கு ஆபாச வார்த்தைகள் அடங்கிய குறுஞ்செய்திகளை அடிக்கடி அனுப்பியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சக ஆசிரியர்கள் அவரை கண்டித்ததாக கூறப்படும் நிலையில், தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், 10 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின் செல்போனுக்கும் ஆபாச வார்த்தைகள் அடங்கிய குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இதனை அறிந்த மாணவியின் பெற்றோர், பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்து பள்ளியையும் முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பள்ளி மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு தந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியின் செல்போனுக்கு மன்னிப்பு கேட்டு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். அப்போது மாணவியின் பெற்றோர் குறுஞ்செய்தியை படித்துப் பார்த்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நல்லம்பள்ளி வட்டார தொடக்கக் கல்வி அலுவலர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
மேலும், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு ஏற்படுத்தியதும் அதனைத் தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டும் உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் தங்கவேல் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும், இதற்கு முன்பும் ஆசிரியர் தங்கவேல் மீது இதுபோன்ற புகார் எழுந்ததாகவும், அதனடிப்படையில் அவர் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அங்கு சென்ற பின்னரும் இதேபோன்ற புகார்கள் எழுந்ததாகவும், பின்னர் மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர் மீண்டும் அதே பள்ளிக்கு வந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மாணவிகளுக்கு பாதுகாப்பான கல்விச் சூழலை உறுதி செய்ய கல்வித்துறை மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து மாவட்டத்தில் இது போன்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு அரசு ஆசிரியர்கள் ஆபாச தொந்தரவுகள் செய்து வருவது தொடர்கதை ஆகியிருக்கும் நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி சந்திரா மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
