உடுமலை அமராவதி அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு 15 நாட்களுக்கு உயிர்த்தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கருகும் தென்னை, கரும்புப் பயிர்கள் காக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையிலிருந்து, விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்றுப் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் உள்ள நிலைப்பயிர்களைக் காப்பாற்றும் வகையில், பிரதான கால்வாயில் 15 நாட்களுக்கு உயிர்த்தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அமராவதி அணை வாயிலாகத் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வரும் நிலையில், நடப்பாண்டு போதிய பருவமழையின்றி அணைக்கு நீர்வரத்து குறைந்தது. குடிநீர் தேவைக்காக மட்டுமே கரூர், தாராபுரம் பகுதிகளுக்கு அடிக்கடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால், புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் சுமார் 30 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட தென்னை மற்றும் கரும்பு உள்ளிட்ட நிலைப்பயிர்கள் நீரின்றி காய்ந்து கருகும் அபாயம் ஏற்பட்டது.
கருகும் பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக உயிர்த்தண்ணீர் திறக்கக் கோரி, அமராவதி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்று, நேற்று இரவு முதல் அமராவதி அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பிரதான கால்வாய் வழியாக நீர் திறக்கப்பட்டது. வருகிற 8-ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு, வினாடிக்கு 440 கனஅடி வீதம் மொத்தம் 570.24 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நீர்திறப்பின் மூலமாகப் புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் நிலையில் உள்ள சுமார் 17,000 ஏக்கர் தென்னை மற்றும் 2,000 ஏக்கர் கரும்புப் பயிர்கள் பயனடையும் என்பதால், அமராவதி பாசன விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
