நேபாள நாட்டின் மாஸ்டர்ஸ் ஹாக்கி அசோசியேஷன் சார்பில், கடந்த செப்டம்பர் 16 முதல் 20-ஆம் தேதி வரை சர்வதேச அளவிலான சவுத் ஏசியன் ஓபன் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி நடைபெற்றது.
தெற்காசிய அளவிலான பல்வேறு அணிகள் பங்கேற்ற நிலையில், இந்திய அணியும் களமிறங்கியது.
இத்தொடரில் இந்திய அணியின் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு வீரர், வீராங்கனைகள் வித்யா, றீபா, பிரதீபா, எல்பின் பால்
தேர்வாகி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். லீக் சுற்றுகள் முதல் இறுதிப் போட்டி வரை களத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, எதிரணிகளை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டியது.
சர்வதேச அரங்கில் இந்திய அணிக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களின் பங்களிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது.
போட்டி நிறைவடைந்து பதக்கங்களுடன் சொந்த ஊர் திரும்பிய நால்வருக்கும், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேருந்து நிலையத்தில் ஊர் பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்பினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வீரர்களுக்கு சால்வை அணிவித்தும், மலர்க்கொத்துகள் வழங்கியும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
இது குறித்து ஹாக்கி வீரர் எல்பின் பால்
தெரிவித்ததாவது : நேபாள நாட்டில் நடைபெற்ற தென் ஆசியா ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள எங்களுக்கு விஜய் வசந்த் எம். பி ஆக்கமும், ஊக்கமும் அளித்ததோடு பண உதவியும் செய்தார். தற்போது நாங்கள் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளோம் ,தற்போது நாங்கள் ஆசிய அளவில் தேர்வு ஆகியுள்ளோம், வரும் காலங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள அரசு எங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும், மேலும் எங்களுக்கு தேவையான பயிற்சியும், உதவியும் அரசு செய்ய வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஹாக்கி வீராங்கனை தீபா தெரிவித்ததாவது :நாங்கள் நேபாள நாட்டிற்கு தெற்காசியா ஹாக்கி போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று உள்ளோம். நாங்கள் கடைசி நேரத்தில் நேபாளம் செல்வதற்காக பணம் பற்றாக்குறை ஆக இருந்தபோது விஜய் வசந்த் எம். பி அவர்களை சந்தித்து நிதி உதவி கோரியபோது உடனடியாக சிரித்த முகத்துடன் எங்களுக்கு நிதி உதவி வழங்கினார். நாங்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியுமா எண்ணினோம் ,எங்களுக்கு உதவிய எம்.பி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஹாக்கி போட்டி தற்போது நமது மாவட்டத்தில் ,மாணவர்களிடத்தில் ஆர்வம் குறைவாக காணப்படுகிறது. எனவே அரசு மாணவர்களிடையே ஊக்கு விக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ,எங்களால் இந்த போட்டியில் வெற்றி பெற்று தங்கம் பெற முடிகிறது என்றால் பள்ளி, கல்லூரி அளவில் மாணவர்களிடம் அதிக அளவில் சாதிக்க முடியும் எனவே அரசு ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
