கடலூரில் ஆணையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். இதனால் மாநகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
கடலூர் மாநகராட்சியில் 2022 ம் ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதியின் கீழ் துவங்கப்பட்ட மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட் பணி முடிவு பெற்றுள்ளது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலனுக்காக உடனடியாக அதனை திறக்க வேண்டும்.
அதற்கான தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் உடனடியாக அந்த தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஆணையாளர் கிஷன் குமாரை சந்திக்க ஆணையர் அலுவலகம் வந்தனர்.
அப்பொழுது திமுக மாநகர செயலாளர் கே எஸ் ராஜா உள்ளே வந்ததால் அவரை யார் என்று ஆணையாளர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து ஆத்திரமடைந்த மாநகர செயலாளர் ராஜா, மேயர் சுந்தரி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஆணையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆணையர் அலுவலகம் முன்பு பரபரப்பாக காணப்பட்ட சூழலில் அனைவரும் மாநகராட்சி ஆணையாளரை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி அலுவலகத்தில் இடையூறாக செயல்படக்கூடாது என போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது வாக்குவாதம் ஏற்பட்டு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக கைது செய்தனர்.
இதனால் ஆணையாளர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
