Headlines

தவெக வேட்பாளர் வெற்றி பெற்றால் பெரிய பெட்டியுடன் வேறு கட்சிக்கு செல்வார் : பொள்ளாச்சி ஜெயராமன்

தவெக வேட்பாளர் வெற்றி பெற்றால் பெரிய பெட்டியுடன் வேறு கட்சிக்கு செல்வார் : பொள்ளாச்சி ஜெயராமன்

மறுபடியும் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றால் பெரிய பெட்டியுடன் வேறு கட்சிக்கு செல்வார் என முன்னாள் துணை சபாநாயகர்
பொள்ளாச்சி ஜெயராமன் பிரச்சாரத்தின் போது பேசினார்.

திருப்பூர் மாவட்டம்,
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தாராபுரம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பானுமதிக்கு ஆதரவாக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

பொட்டிக்காம்பாளையம், தாசார்பட்டி பிரிவு, சித்தூர், முண்டுவேலாம்பட்டி, பொம்மநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிகாலை முதல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் வேட்பாளர் பானுமதிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பொதுமக்களிடம் பேசிய அதிமுக வேட்பாளர் பானுமதி, “என்னை சட்டமன்றத்திற்கு அனுப்பினால், உங்கள் குரலாக சட்டமன்றத்தில் ஒலித்து, இப்பகுதியில் நிலவும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்” என உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் நிறைவேற்றப்பட்டால், பிஏபி பாசனத்திற்கு ஆண்டுக்கு ஒருமுறை தண்ணீர் கிடைப்பதுடன், கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றால் ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மீண்டும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை வெற்றி பெறச் செய்தால், மீண்டும் இதைவிட பெரிய பெட்டியை வாங்கிக்கொண்டு வேறு கட்சிக்கு சென்று விடுவார்” என விமர்சித்தார். அதிமுக வேட்பாளர் பானுமதிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், தொகுதியின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *