தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் உள்ளக குழுவின் பயிற்சியை தொடங்கி வைத்து அமைச்சர் விஸ்வநாதன் தனது உரையை தொடங்கினார்.
உரை தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே அரங்கில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இருப்பினும் அமைச்சர் எவ்வித தடங்கலுமின்றி தனது பேச்சை தொடர்ந்து பேசினார். ஆனால் மின்வெட்டால் அமைச்சர் பேசியது அங்கிருந்து கல்லூரி மாணவர்களுக்கு அவர் பேசியது புரியவில்லை. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மத்தியில் சற்று நேரம் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் மின்வெட்டை சரி செய்வதற்காக உடனடியாக ஆசிரியர்கள் அதற்கான பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், நீண்ட நேரம் முயற்சி செய்தும் ஜெனரேட்டரிலும் பழுது ஏற்பட்டதால் சுமார் பத்து நிமிடம் மின்வெட்டிலே அமைச்சர் பேசினார்.
தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வரும் சூழலில் அரசு விழாவிலும் அதுவும் அமைச்சர் பேசும்போதே மின்சாரம் துண்டிக்கப்பட்டது, அங்கிருந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனது உரையை நிறைவு செய்த அமைச்சர் மின்வெட்டு ஏற்பட்டது தானே செய்தி என நகைச்சுவையாக குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து பேசிய தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணனும் அமைச்சர் பேசும்போது மின்சாரம் தடைபட்டது அதுதானே என அவரும் நகைச்சுவையாக தெரிவித்தார். மேலும் இது மின்வாரியத்தால் ஏற்பட்ட மின்வெட்டு அல்ல கல்லூரியின் மின் விநியோகப் பெட்டியில் உள்ள ஃபியூஸ் கேரியர் பழுதானதால் ஏற்பட்ட பிரச்சனை எனவே இதனை தவறாக செய்தி வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதற்கு அமைச்சர் நோ ப்ராப்ளம் என குறிப்பிட்டார்.
