Headlines

மாரண்டஅள்ளியில் 11.8 செ.மீ. மழை : குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

மாரண்டஅள்ளியில் 11.8 செ.மீ. மழை : குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

பஞ்சப்பள்ளி சாலை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகம், கால்நடை மருத்துவமனை மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஒரே இரவில் 118 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில், சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகினர். பஞ்சப்பள்ளி சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் தண்ணீருக்குள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

மழைநீர் சாலைகளில் மட்டுமின்றி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகம், கால்நடை மருத்துவமனை, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்ததால் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அத்தியாவசிய பொருட்களை பாதுகாப்பாக வைக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “மாரண்டஅள்ளி பேரூராட்சி பகுதிகளில் போதுமான மழைநீர் வடிகால் மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், கனமழை பெய்யும் ஒவ்வொரு முறையும் மழைநீர் சாலைகளிலும் குடியிருப்புகளிலும் தேங்குகிறது. கடந்த 3 ஆண்டுகளாக இதேபோன்ற வெள்ள பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை” என குற்றம் சாட்டினர்.

மழைக்காலத்தில் மட்டும் தண்ணீரை அகற்றுவதற்கு பதிலாக, மழைநீர் செல்லும் பாதைகளை முறையாக சீரமைத்து, தேவையான இடங்களில் புதிய வடிகால் கால்வாய்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தாழ்வான பகுதிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *