விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த தைலாபுரம் கிராமத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் நலப்பள்ளிக்கு சுமார் ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களின் திறப்பு விழா நடைபெற்றது.
சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு கலந்து கொண்டு கட்டிடங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
திண்டிவனம் தொகுதியில் எம்.பி. நிதியிலிருந்து சமுதாய நலக்கூடம் திறந்து வைக்கப்பட்டது. அதேபோல் வானூர் தொகுதியில் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்து புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இங்கு பெண் குழந்தைகள் 5-ம் வகுப்பு வரை படிக்கின்றனர். சேதமடைந்த கழிப்பறையை சீரமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கூறி மதிப்பீடு எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அரசுப் பள்ளிகளை பலப்படுத்த சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றிய பிறகு, இப்பள்ளியை தொடக்கப்பள்ளியிலிருந்து நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.
பாரதிதாசன் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் (தி.மு.க.) எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார். நாங்கள் அரசியல் செய்யவில்லை, தி.மு.க.தான் அரசியல் செய்கிறது. 609 பேர் விண்ணப்பித்ததில் 601 பேர் தகுதியானவர்கள் என்று கூறிவிட்டு 153 பேருக்கு மட்டும் வழங்கியுள்ளனர். மீதமுள்ள தலித் மாணவர்களுக்கு இது துரோகம் இல்லையா?
வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே எப்.ஐ.ஆர். போட்டது தி.மு.க. அரசுதான். பாதிக்கப்பட்ட முரளிராஜா இன்று காவலராக இருந்து சஸ்பெண்டில் உள்ளார். இதற்கு தி.மு.க. என்ன பதில் சொல்லும்?
திருநெல்வேலி கவின் படுகொலை வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம் நடத்திய பிறகுதான் சரவணன் கைது செய்யப்பட்டார். அவரது மனைவி கிருஷ்ணகுமாரி இன்னும் கைது செய்யப்படவில்லை. எங்கள் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் முதல்-அமைச்சரை சந்தித்து பேசிய பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வேங்கைவயல் பிரச்சினையிலும் தலைவர் முதல்வரை சந்தித்தார், புதுக்கோட்டையில் போராட்டம் நடத்தினோம். இதில் தி.மு.க. நாடகம் ஆடுகிறது. வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.
பாரதிதாசன் குடும்பத்தை உளவுத்துறை போலீஸ் மூலம் மிரட்டியதாக கூறுவது திட்டமிட்ட அவதூறு. தம்பி பாரதிதாசன் எனது தம்பி போன்றவர். அவரது பாதுகாப்புக்கும், படிப்புக்கும் நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். சட்டத்திற்கு புறம்பாக யாரும் செல்லக்கூடாது.
பில் வழங்காதது துறைரீதியான நடைமுறை. கடந்த காலத்திலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. பில் வராவிட்டாலும் கல்வி நலனை கருதி முழு தொகையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையத்தை தனியாருக்கு வழங்குவதை விடுதலைச் சிறுத்தைகள் கொள்கை அடிப்படையில் எதிர்க்கிறது. சென்னை விமான நிலையத்திலேயே ஒரு பகுதி தனியாருக்கு வழங்கப்பட்டுவிட்டது. இதுகுறித்து அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
