Headlines

கிராமக் குளத்தில் புகுந்த 7 அடி முதலை : மீட்ட வனத்துறையினர்

கிராமக் குளத்தில் புகுந்த 7 அடி முதலை : மீட்ட வனத்துறையினர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கிராமக் குளத்தில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சுமார் 7 அடி நீளமுள்ள முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.

சீர்காழி அருகே உள்ள அளக்குடி கிராமம் கொள்ளிடம் ஆற்றை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் இருந்து சுமார் 7 அடி நீளமுள்ள முதலை ஒன்று கிராமத்தில் உள்ள குளத்திற்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது.

குளத்தில் முதலை இருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து சீர்காழி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சீர்காழி வனசரக அலுவலர் தலைமையில் வனவர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் வனப்பணியாளர்கள் அடங்கிய குழுவினர் அளக்குடி கிராமத்திற்குச் சென்றனர்.

அங்கு குளத்தில் இருந்த முதலையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். சுமார் 7 அடி நீளமும் 100 கிலோ எடையும் கொண்ட பெண் முதலை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

பின்னர், மீட்கப்பட்ட முதலையை வனத்துறையினர் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப் பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.

கிராமத்திற்குள் முதலை புகுந்ததால் அச்சத்தில் இருந்த மக்கள், வனத்துறையினரின் நடவடிக்கைக்குப் பின்னர் நிம்மதி அடைந்தனர்.

கொள்ளிடம் ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களில் முதலைகள் நடமாட்டம் இருப்பதால், ஆற்றுப் பகுதிகளிலும் நீர்நிலைகளிலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *