புதுச்சேரியில் கிழக்கு கடற்கரை சாலையில் பிறந்தநாளன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ரவுடியை 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலையாளிகளை மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே நடுரோட்டில் ரவுடி ஆனந்தை 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்யும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் என்கிற முண்டகண்ணு ஆனந்த் (33). ரவுடியான இவர் மீது மூன்று கொலை, அடிதடி உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவைவில் உள்ளது.

இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது கூட்டாளிகளுடன் உருளையான்பேட்டை பகுதியில் விக்கி என்கிற விக்னேஷை கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்து பிணையில் வந்துள்ளார்.
இவருக்கு நேற்று பிறந்தநாள், அதனால் தனது நண்பர்களுடன் வெளியே சென்று கொண்டாடுவதற்காக கார் ஷோரூமில் வேலை செய்யும் தனது மனைவியை சந்தித்துவிட்டு, அவரது இருசக்கர வாகனத்தை வாங்கிகொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை ஒரு தனியார் திருமண மண்டபம் வாசலில் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.
இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட ரவுடி ஆனந்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு கண்காணிப்பாளர் வம்ஸ்ரீதர ரெட்டி கொலை சம்பவம் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். மேலும் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.
இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள லாஸ்பேட்டை காவல்நிலைய போலீசார், சமீபத்தில் நடந்த விக்கி என்கிற விக்னேஷ் கொலைக்கு, பழிக்கு பழியாக ஆனந்த் கொலை செய்யப்பட்டாரா?அல்லது வேறு ஏதும் கும்பல் இக்கொலையில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிறந்தநாளன்று பட்டபகலில் ரவுடி நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே நடுரோட்டில் ரவுடி ஆனந்தை 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்யும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
