வாணியம்பாடி அருகே ஹாலோ பிரிக்ஸ் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் லாரி மீது உயர் மின் அழுத்த கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியில் சுதா என்பவருக்கு சொந்தமான வி.எஸ்.எல். ஹாலோ பிரிக்ஸ் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
தொழிற்சாலையில் பூங்குளம், புதூர் பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு (52) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று எம்-சாண்ட் ஏற்றி வந்த லாரியில் இருந்து மணலை இறக்குவதற்காக சாமிக்கண்ணு லாரியின் இரும்பு கதவை திறக்க முயன்றுள்ளார். அப்போது, லாரியின் ஒரு பகுதி மேலே செல்லும் உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதில், லாரி முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி சாமிக்கண்ணு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி கிராமிய போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
