Headlines

சிவகங்கை இரட்டைக் கொலை: 2-வது நாளாக சாலை மறியல் – மருத்துவமனை வாகனம் மீது தாக்குதலால் பதற்றம்

சிவகங்கை இரட்டைக் கொலை: 2-வது நாளாக சாலை மறியல் – மருத்துவமனை வாகனம் மீது தாக்குதலால் பதற்றம்

சிவகங்கை அருகே பழமலை நகர் கொடிக்காடு கண்மாய் பகுதியில் கடந்த 16-ஆம் தேதி தெய்வேந்திரன், பூப்பாண்டி ஆகிய இரு இளைஞர்கள் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும், கொலைக்கான காரணத்தை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 2-வது நாளாக உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காளையார்கோவில் பகுதியில் 500-க்கும் மேற்பட்டோர் தொண்டி–மதுரை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால், அந்த வழித்தடத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்கும் காவல்துறை, பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நடமாடும் குற்றவாளிகளை கைது செய்வதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதற்கிடையே, போராட்டம் நடைபெற்ற பகுதியில் மருத்துவமனை வாகனம் ஒன்று வந்தபோது, சில போராட்டக்காரர்கள் வாட்டர் கேன்களை வீசி, வாகனத்தின் முன்பக்க கண்ணாடி மற்றும் வாகனத்தின் மீது தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, காளையார்கோவில் தாசில்தார் மற்றும் சிவகங்கை ஆர்டிஓ செபி கிரேசியா ஆகியோர் சம்பவ இடத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அசம்பாவிதங்களைத் தடுக்க காளையார்கோவில் பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரட்டைக் கொலை சம்பவத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அப்பகுதியில் பரபரப்பு நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *