Headlines

பயணிகளின் உயிரை காப்பாற்றி உயிர் விட்ட அரசு பேருந்து ஓட்டுநர்

பயணிகளின் உயிரை காப்பாற்றி உயிர் விட்ட அரசு பேருந்து ஓட்டுநர்

குடியாத்தத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் 25 பயணிகளின் உயிரை பத்திரமாக காப்பாற்றி தனது உயிரை விட்ட நிகழ்வு அரசு பேருந்து ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டிலிருந்து காலை 8 மணி அளவில் சுமார் 25 பயணிகளுடன் காட்பாடி சில்க் மில்க் பகுதியில் வசிக்கும் அரசு பேருந்து ஓட்டுநர் வெங்கடசாமி மற்றும் நடத்துனர் அன்பழகன் வந்து கொண்டிருந்தனர்

குடியாத்தம் நகரில் கவுண்டன்யா மகாநதி ஆற்று ஓரம் புதிய பைபாஸ் சாலையில் கங்கை அம்மன் கோவில் பாலம் அருகே வரும்போது ஓட்டுநர் வெங்கடசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. கடும் நெஞ்சு வலிக்கு மத்தியிலும் ஓட்டுனர் வெங்கடசாமி பேருந்தில் பயணிகள் காப்பாற்றுவதற்காக பேருந்தை சாமர்த்தியமாக ஓரம் கட்டி நிறுத்தி மயங்கி சரிந்தார். பேருந்தில் வந்த பயணிகள் ஓட்டுநர் வெங்கடசாமி மயங்கியதைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர். சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெங்கடசாமியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அரசு பேருந்து ஓட்டுனர் வெங்கடசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இதனை அறிந்த அவர் பணிபுரியும் பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் பணிமனை அதிகாரிகள், சக ஊழியர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். உடனடியாக மனைவிக்கு
குடியாத்தம் காவல்துறையினர் தகவல் கொடுத்ததின் அடிப்படையில் உறவினர்கள் விரைந்து வந்தனர் இதனால் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

25 பயணிகளின் உயிரை காப்பாற்றி அரசு பேருந்து ஓட்டுநர் உயிர் இழந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *