சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிளாங்காட்டூரைச் சேர்ந்த ராமச்சந்திரன், கடந்த 6 ஆண்டுகளாக மூங்கில் ஊரணியில் வீடுகட்டி வசித்து வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது மனைவியுடன் தனியாக வசித்து வருவதாகவும், கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த முறை 684 ரூபாய் மின்கட்டணம் செலுத்தியதாக கூறப்படும் நிலையில், தற்போது 6,940 ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் தானும் தனது மனைவியும் மட்டுமே இருப்பதாகவும், மனைவி ஆடு மேய்க்கச் செல்வதாகவும், தானும் கூலி வேலைக்குச் செல்வதாகவும் கூறியுள்ள ராமச்சந்திரன், இவ்வளவு அதிகமான மின்கட்டணம் வந்தது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தங்களது பகுதியில் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதாகவும், சீரான மின்விநியோகம் இல்லாத நிலையிலும் ஆயிரக்கணக்கில் மின்கட்டணம் வந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மின்கட்டண கணக்கீடு தொடர்பாக அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், தனது மின்கட்டணத்தை மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் ராமச்சந்திரன் மனு அளித்துள்ளார்.
ரூ684-ஆக இருந்த மின்கட்டணம் திடீரென ரூ6,940-ஆக உயர்ந்தது ஏன்? மின்கணக்கீட்டில் தவறு ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
