கோலிவுட் நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தைத் தாண்டி கேரளாவிலும் தனது அமைப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாலக்காடு மாவட்டம் சித்தலஞ்சேரி கடம்படி பகுதியில் கேரளா மாநிலத்தின் முதல் தவெக அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.
அலுவலகத் திறப்பு விழாவையொட்டி தவெக தொண்டர்கள் வாத்திய மேளங்களுடன் ஊர்வலமாக வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கட்சிக் கொடிகள் மற்றும் பதாகைகளுடன் திரண்ட தொண்டர்கள், விஜய்க்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியபடி விழா நடைபெற்ற இடத்திற்கு வந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், தவெக மாவட்டச் செயலாளர் காஜா ஹுசைன், கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உள்ளூர் ஆதரவாளர்கள் இதில் பங்கேற்றனர்.
கேரளாவிலும் கால்பதிக்கும் தவெக
தமிழக அரசியலில் முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தவெக, கேரளாவிலும் தனது அமைப்பை விரிவுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கேரளாவில் கட்சியின் முதல் யூனிட்டை வயநாடு மாவட்டம் வெப்பள்ளியில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியதாக மே மாதத்தில் மலையாள செய்தி வெளியிட்டிருந்தது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் கட்சி பெற்ற அரசியல் வெற்றியைத் தொடர்ந்து, கேரளாவிலும் கட்சியின் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் முயற்சி தொடங்கியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது
அதன் தொடர்ச்சியாக, பாலக்காடு மாவட்டத்தில் அலுவலகம் திறக்கப்பட்டிருப்பது கேரளாவில் தவெகவின் அமைப்பு ரீதியான செயல்பாடுகள் அடுத்த கட்டத்தை எட்டியிருப்பதைக் காட்டுவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லையோர மாவட்டமான பாலக்காடு

தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பாலக்காடு மாவட்டம், தவெகவின் கேரள விரிவாக்கத்திற்கு முக்கியமான பகுதியாக பார்க்கப்படுகிறது. தமிழக எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் விஜய்க்கு ஏற்கனவே ரசிகர் மன்றங்கள் மற்றும் ஆதரவாளர்கள் இருப்பதால், அவற்றை அரசியல் அமைப்பாக ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, புதிய அலுவலகம் மூலம் கட்சி உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், பொதுமக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தவெக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
