உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழ் மொழியை, ஓதுவார்களை சமமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தெய்வத்தமிழ் பேரவை சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் திருக்குடமுழுக்கு வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி கோவிலுக்குள் யாகசாலை பூஜைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில், இக்குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு, பல்வேறு முறை கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழு உறுப்பினர் சிம்மம் சத்தியபாமா அம்மையார், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மீனாட்சியம்மனுக்குத் தமிழ்க் குடமுழுக்கு நடத்திட வேண்டுமெனக் கோரி வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில் (W.P. No. 33101 of 2026), நீதிபதி கிருஷ்ணன் இராமசாமி, 24.08.2026 அன்று வழங்கிய தீர்ப்பில், தமிழில் மந்திரங்கள் ஓதப்படுவதை உறுதி செய்யக் கூறியதோடு, இத்தீர்ப்பு அனைத்துக் கோயில்களுக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டார்.
நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையிலும், மதுரை மீனாட்சியம்மன் குடமுழுக்குக்காக தொடங்கப்பட்ட வேள்விச்சாலையில், தமிழுக்கு சரிபாதி இடங்களை ஒதுக்காமல், கணக்குக் காட்டுவதற்காக தமிழ் ஓதுவார்களை வேள்விச் சாலைக்கு வெளியே நிறுத்துவதாக தெய்வத்தமிழ் பேரவையினர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழில் குடமுழுக்க நடத்தக் கோரியும், தமிழில் அர்ச்சனை – குடமுழுக்கு ஆகியவற்றை அனைத்துக் கோயில்களிலும் உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டுமெனக் கோரியும், இன்று (12.09.2026) மதுரை பெத்தானியாபுரம் குரு திரையரங்கம் அருகே தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு முந்தைய நாளான நேற்றிரவு (11.09.2026) காவல்துறை தடை விதித்துக் கடிதம் வழங்கியது காவல்துறை. எனினும், காவல்துறையினரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தத் திரண்ட தெய்வத் தமிழ் பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை காவல்துறையினர்
பலவந்தப்படுத்தி கைது செய்தனர். இதனை கண்டித்து தெய்வத் தமிழ் பேரவை மற்றும் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் முழக்கங்களை எழுப்பினர். பிறகு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதே இடத்தில் சிறிது நேரம் கழித்து
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வைகறை தலைமையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் சிறிது நேரம் நிலவியது. காவல்துறை அவர்களையும் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குச்சனூர் கிழார், சித்தர் மூங்கிலடியார், சிம்மம் சத்தியபாமா அம்மையார், க. அருணபாரதி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
