பல்லடம் அருகே தன் மீது புகார் கொடுத்தவரை ஜீப் ஏற்றி கொலை செய்த வழக்கில் சாமலாபுரம் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமிக்கு
14 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய்.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட சாமலாபுரம் பேரூராட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் விநாயகா பழனிச்சாமி. தன்னை எதிர்த்து புகார் மனு அளித்த பழனிசாமி என்பவர் மீது ஜீப்பை ஏற்றி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி கொலை செய்தார்.
அன்னூர் சாலையில் காரணம்பேட்டையில் இருந்து சோமனூர் செல்லும் வழியில் கருகம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் மற்றொரு பழனிச்சாமி 57.,சென்றபோது அவர் மீது பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி சென்ற பொலிரோ ஜீப் திடீரென மோதியது. இதில் நிலை தடுமாறிய பழனிச்சாமி மீது மனிதாபிமானமே இல்லாமல் ஜிப்பை ஏற்றி பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக சம்பவம் குறித்து 108 ஆம்புலன்ஸ் க்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பழனிச்சாமியை பரிசோதித்துப் பார்த்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமியை கொலை வழக்கில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் வழக்கு திருப்பூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் 2 ல் நடைபெற்று வந்த நிலையில் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி குற்றவாளி என நீதிபதி கனகராஜ் அதிரடி தீர்ப்பு வழங்கினார். கொலை வழக்கில் 14 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
