சேலத்தில் கார்களில் கடத்தப்பட்ட 68 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர்.
சேலம் மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் காரிப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அக்ரகார நாட்டாமங்கலம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த இரண்டு கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காரிப்பட்டி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அயோத்தியா பட்டினம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்தபோது அதில் மேலும் இரண்டு கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கேரளா மாநிலத்தை சேர்ந்த அன்வர் ரிசாத்( 30) அன்வர் சாதிக் (30)முகமது பாசில் இஜலால்(20) ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்களை தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஒடிசாவில் இருந்து சுமார் 68 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்ததாக தெரிவித்த அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மற்றொரு காரில் 30 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.
மேலும் ரிசாத் மற்றும் அன்வர் சாதிக் ஆகியோரது காரில் இருந்து 34 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சபீர் (30) ஜுனாய்டு(35) ஆகிய இருவரையும் கைது செய்து காரிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மொத்தம் 68 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மூன்று சொகுசு கார்களை பறிமுதல் செய்து ஆறுபேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப உள்ளனர்.
