Headlines

கோவை நகை கொள்ளை : புனேவில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

கோவை நகை கொள்ளை : புனேவில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

கோவையில் ஆந்திரத் தொழிலதிபரிடம் ரூ.1.06 கோடி பணத்தைக் கொள்ளை அடித்துத் தப்பியோடிய வடமாநிலக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 5 பேரைக் கைது செய்யக் கோவை தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் முகாமிட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியைச் சேர்ந்தவர் தமாம் ரங்கசாமி. பிரபல தொழிலதிபரான இவர், நகைகள் வாங்குவதற்காகக் கடந்த வாரம் ஆந்திராவில் இருந்து சொகுசு ஆம்னி பேருந்தில் கோவைக்கு வந்தார். ரேஸ்கோர்ஸ் காவல் எல்லைக்கு உட்பட்ட லட்சுமி மில் சந்திப்பில் பேருந்தில் இருந்து இறங்கி அவர் நடந்து சென்று கொண்டு இருந்த போது, அவரைப் பின்தொடர்ந்து காரில் வந்த மர்மக் கும்பல் ஒன்று, அவரிடம் இருந்த ரூ.1.06 கோடி ரொக்கப் பணத்தைக் கணநேரத்தில் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.
​இச்சம்பவம் குறித்துத் தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ்குமார் மற்றும் ரமேஷ்குமார் ஆகிய இருவரைக் காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.
துவக்கத்தில் இக்க கொள்ளைச் சம்பவத்தில் 4 பேர் மட்டுமே ஈடுபட்டதாகக் கருதப்பட்டது. ஆனால், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமரா (CCTV) காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்த போது, இதில் மொத்தம் 8 பேருக்குத் தொடர்பு இருப்பது அம்பலமானது.

​இதனிடையே, இக்கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு நபரைப் போலீசார் ரகசியமாகப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த முக்கிய 5 வடமாநில நபர்கள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பிடிபட்ட நபருடன் கோவை தனிப்படை காவல்துறையினர் உடனடியாகப் புனே விரைந்து அங்கு முகாம் அமைத்து உள்ளனர்.​உள்ளூர் புனே காவல்துறையின் உதவியுடன், பதுங்கி இருக்கும் கொள்ளைக் கும்பலின் இருப்பிடத்தைச் சுற்றி வளைத்துத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

​இது குறித்துக் கோவை காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், “கண்காணிப்புக் கேமரா ஆய்வின் மூலம் கொள்ளைக் கும்பலில் 8 பேர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலும், ஒருவர் எங்களது காவலில் விசாரணையிலும் உள்ளனர்.

தலைமறைவாக உள்ள மீதி 5 வடமாநில நபர்களையும் புனேவில் முகாமிட்டு உள்ள எங்களது தனிப்படை போலீசார் மிக நெருங்கி விட்டனர். ஓரிரு நாட்களில் அனைவரும் கைது செய்யப்பட்டு கோவைக்கு அழைத்து வரப்படுவார்கள்” எனத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *