Headlines

நள்ளிரவில் தொடர் மின்தடை : மின்வாரிய அலுவலகம் முற்றுகை

நள்ளிரவில் தொடர் மின்தடை : மின்வாரிய அலுவலகம் முற்றுகை

ஆம்பூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நள்ளிரவில் தொடரும் மின்தடையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பல்வேறு கிராம பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தீவிரமடைந்துள்ள அறிவிக்கப்படாத இரவு நேர மின்வெட்டால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பகல் நேரங்களில் கொளுத்தும் வெயிலின் தாக்கம் ஒருபுறமிருக்க, இரவு நேரங்களிலும் புழுக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தச் சூழலில், இரவு 9 மணிக்கு மேல் தொடங்கி விடிய விடிய அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால்
பள்ளி, கல்லூரி மாணவர்கள் இரவில் தேர்வுக்குப் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.கைக்குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கொசுக்கடியாலும் புழுக்கத்தாலும் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர். இரவு நேரப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவும் வழக்கம்போல் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மின்னூர் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு,
அலுவலகத்தில் பணியில் இருந்த அதிகாரிகளிடம், “இரவு நேரங்களில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் மின்சாரத்தை நிறுத்துவது எந்த வகையில் நியாயம் என்று கூறி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு நீண்ட நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தொழில்நுட்பக் கோளாறுகள் உடனடியாகச் சரிசெய்யப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தற்காலிகமாகக் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *