கள்ளக்குறிச்சி மாவட்டம், தெங்கியாநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஜெகதீசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, வீட்டிலேயே களைக்கொல்லி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அம்மாணவி, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றநிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில், கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் ஜெகதீசனை அழைத்து வந்த போலீசார், அவரை காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.
பள்ளி மாணவிக்கு ஆசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
