விருதுநகர் அருகே சேர்வைக்காரன்பட்டியில் விவசாய தேவைக்கான உர மூட்டைகளை லாரியில் வைத்து வீடு வீடாக சென்று ஒரு கும்பல் விற்பனை செய்துள்ளது. கடைகளில் 2200 ரூபாய்க்கு விற்பனையாகும் உர மூட்டைகளை தாங்கள் 1100 ரூபாய்க்கு மலிவு விலைக்கு தருவதாக கூறியதால், அதனை நம்பி ஏராளமான விவசாயிகள் உர மூட்டைகளை வாங்கி உள்ளனர். ஆனாலும் இது தொடர்பாக சில விவசாயிகளுக்கு சந்தேகம் எழுந்ததால் இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு வந்த வேளாண் துறை அதிகாரிகள் உரம் விற்பனை செய்த கும்பலிடன் விசாரணை நடத்த முயன்றபோது லாரியுடன் உரமூட்டைகளை விட்டுவிட்டு தப்பி ஓடினர். பின்னர் அவர்கள் விற்பனை செய்த உர மாதிரியை பரிசோதித்த போது அவை முழுவதும் களிமண் கலந்த கலப்படம் செய்யப்பட்ட போலியான உரம் என்பதும், உர மூட்டைகளில் அச்சிடப்பட்டிருந்த பெயரில் எந்தவித உரிமமும் பெறப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து லாரியில் இருந்த 2000 கிலோ எடையுள்ள 44 ஊரை மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்து ஆமத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் வேளாண்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலி உரம் விற்பனை செய்த தஞ்சாவூர் சேர்ந்த பெருமாள் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த பொன்னுச்சாமி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.
கலப்படம் செய்யப்பட்ட போலி உரங்களை மலிவு விலைக்கு தருவதாக விவசாயிகளிடம் மோசடி செய்த இதே போன்ற கும்பல் தமிழக முழுவதும் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் தமிழக முழுவதும் வேளாண் துறை மற்றும் காவல் துறையினர் போலி உரம் விற்பனை குறித்து உரிய ஆய்வு நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
