Headlines

ஆக்சனில் இறங்கிய சென்னை போலீஸ் : பல்வேறு மாநிலங்களில் சைபர் குற்றவாளிகள் கைது

ஆக்சனில் இறங்கிய சென்னை போலீஸ் : பல்வேறு மாநிலங்களில் சைபர் குற்றவாளிகள் கைது

சைபர் குற்றவாளிகளைப் பிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையரால் அமைக்கப்பட்ட 4 தனிப்படை போலீசார், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் முகாமிட்டு 10 நபர்களை அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், மத்திய குற்றப் பிரிவின் (CCB) சைபர் குற்ற காவல் நிலையம் மற்றும் வடக்கு மண்டல சைபர் குற்ற காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு சைபர் நிதி மோசடி வழக்குகளில், வெளிமாநிலங்களில் தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளிகளைக் கைது செய்யும் பொருட்டு, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான இப்படைகள், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் முகாமிட்டு, தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில் தற்போது வரை மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குற்றவாளிகள் தொடர்புடைய 6 வெவ்வேறு வழக்குகளில் மொத்தம் ரூ.24.54 கோடி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ரூ.42,72,258/- மீட்கப்பட்டுள்ளது.
இவ்வழக்குகளில் கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகளுக்கு ரூ.44,17,630/- பணம் சென்றுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மீதமுள்ள 4 பேர் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 6 பேர், மகாராஷ்டிராவில் 2 பேர் மற்றும் குஜராத்தில் 2 பேர் அடங்குவர். இவர்களில் 8 பேர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 2 பேருக்கு BNSS பிரிவு 35(3)-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த குற்றவாளிகளிடம் இருந்து 8 கைப்பேசிகள், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள், 2 வங்கிப் பாஸ்புக்குகள் மற்றும் 1 காசோலைப் புத்தகம் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் மற்றும் ஆவண ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வழக்குகளில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மாநில எல்லைகளைத் தாண்டி செயல்பட்டு குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை பாராட்டிய காவல் ஆணையர் அமல்ராஜ், சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் எந்த மாநிலத்தில் பதுங்கியிருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் இணையவழி மோசடிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருந்து, சைபர் குற்றங்கள் தொடர்பாக உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் உதவி எண்ணை தொடர்புகொள்ளவோ அல்லது cybercrime.gov.in இணையதளத்திலோ புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *