நெல்லை மாவட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகவோ, சாதிப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையிலோ இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களை சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய மற்றும் சட்டவிரோதமான பதிவுகளை உருவாக்குபவர்கள் மட்டுமின்றி, அவற்றை பகிர்வு செய்பவர்கள் மற்றும் அதற்கு ஆதரவாக தீங்கிழைக்கும் கருத்துகளை பதிவிடுபவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், நெல்லை பழையபேட்டை பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா (20) என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிவாளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதனை சைபர் கிரைம் காவல்துறையினர் கண்டறிந்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து எச்சரிக்கை விடுத்ததுடன், வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தொடர்ந்து அவரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் பிரச்சினையைத் தூண்டும் வகையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாலோ, பயங்கர ஆயுதங்களுடன் இருக்கும் நபர்களின் புகைப்படங்களை பகிர்ந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
