பீகார் மாநிலத்தில் தொடர் கனமழை மற்றும் நேபாளப் பகுதிகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரால் 12 மாவட்டங்கள் வரலாறு காணாத வகையில் வெள்ளகாடாகியுள்ளன.
வெள்ளப்பெருக்கின் காரணமாக கங்கை நதியின் நீர்மட்டம் இதுவரை இல்லாத அளவில் உயர்ந்துள்ளது.
பாட்னா, பகல்பூர், முங்கேர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
வெள்ளத்தின் சீற்றத்தை விட, நேபாளப் பகுதிகளில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்படும் விலங்குகளின் அழுகிய சடலங்கள் மற்றும் பெருமளவிலான கழிவுகள் குடிநீரில் கலப்பதால் காலரா, டெங்கு மற்றும் மலேரியா போன்ற கொடிய தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவக் குழுவினர் கிராமம் கிராமமாகச் சென்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளத்தால் தனிமைப் படுத்தப்பட்ட கிராமங்களில் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக நூற்றுக்கணக்கான நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், நீர்மட்டம் தொடர்ந்து அபாய அளவிலேயே நீடிப்பதால் மீட்புப் பணிகளில் கடும் சவால் நிலவுகிறது. அளவுக்கு மீறிய வெள்ளப் பெருக்கு காரணமாக பீகார் மாநிலத்தில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
இதனிடையே மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள ரதுவா என்ற இடத்தில் கங்கை ஆற்றின் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கால் 150 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் அடித்துசெல்லப்பட்டது.
