தாம்பரம் அருகே காட்டாங்குளத்தூர் சிக்னலில் அமைச்சரின் உறவினர்கள் சென்ற
கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 26 வயது இளைஞர் உயிரிழந்தார்.
காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த இறையன்பு (26), தனது ஹோண்டா டியோ மோட்டார் சைக்கிளில் காட்டாங்குளத்தூர் துலுக்கத்தம்மன் கோயில் திருவிழாவுக்குச் நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில் சென்று கொண்டிருந்தார்.
காட்டாங்குளத்தூர் சிக்னல் அருகே ஜிஎஸ்டி சாலையை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி கடக்க முயன்றபோது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற TN 84 AZ 5941 என்ற மாருதி எர்டிகா கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த இறையன்புவை பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் எஸ்பி கோயிலில் உள்ள அரசு அவசர சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுமார் 00.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் தொடர்புடைய மாருதி எர்டிகா கார் மற்றும் ஹோண்டா டியோ மோட்டார் சைக்கிள் ஆகிய இரு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன,
விபத்து ஏற்படுத்திய பறிமுதல் செய்யப்பட்ட கார் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் எனவும், அவரது மகள்களை ராஜபாளையத்தில் இருந்து சென்னை அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. காரை ஆயுதப்படை காவலர் சின்ன அக்னி என்பவர் ஓட்டி வந்ததாக தெரியகிறது.
உயிரிழந்த இறையன்புவின் தந்தை சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், கார் ஓட்டிவந்த ஆயுதப்படை காவலர் மதுரையைச் சேர்ந்த சின்ன அக்னி (28) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
