தென்னிலை அருகே அரசு மதுபானக் கடை பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கி, அவரிடம் இருந்த செல்போன், வாக்கி டாக்கி மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்ற ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 3 புலம்பெயர் தொழிலாளர்களை தென்னிலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்னிலை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் கணேசன்.
தென்னிலை அருகே உள்ள அரசு மதுபானக் கடை பகுதியில் இரவு நேர ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியில் 3 பேர் மதுபானம் அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனை கவனித்த காவலர் கணேசன், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் காவலர் கணேசனுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
தொடர்ந்து, மூவரும் சேர்ந்து காவலர் கணேசனை தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும், அவரிடம் இருந்த செல்போனை பறித்ததுடன், காவல் பணிக்காக பயன்படுத்தி வந்த வாக்கி டாக்கி மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. காவலரை தாக்கிய பின்னர், அவரது இருசக்கர வாகனத்திலேயே மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் காயமடைந்த காவலர் கணேசன், சம்பவம் குறித்து தென்னிலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, காவலரை தாக்கி, வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிச் சென்ற 3 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குடாக்ரிஷ் நாயக் (25), ராகேஷ் பாரிக் (26), ரபி (25) என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் தென்னிலை பகுதியில் தறி (நெசவு) வேலை செய்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரையே தாக்கி, அவரது செல்போன், பணியில் பயன்படுத்தும் வாக்கி டாக்கி மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றதாக கூறப்படும் சம்பவம் தென்னிலை பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
