தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே குண்டன் கொட்டாய் பகுதியில் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் சிக்கியவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
குண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (50). இவர் கிணற்றுக்குள் விழுந்த கோழியை மீட்பதற்காக சுமார் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கியுள்ளார்.
கோழியை மீட்ட பின்னர் மேலே ஏற முடியாமல் தவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலக்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மீன்பிடி வலை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கிணற்றில் சிக்கித் தவித்த முருகனை பத்திரமாக மேலே கொண்டு வந்தனர்.
90 அடி ஆழ கிணற்றில் சிக்கியவர் உயிருடன் மீட்கப்பட்டதால், அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
